Wednesday 26 October 2011

நீலகிரி (The Nilgiris)

பெயர்க் காரணம்:

நீலகிரி மலையைக் காண்பதற்கு நீலமாக இருப்பதால், 'நீலகிரி' என அழைக்கப்படுகிறது.உதகமண்டலம் என்ற பெயருக்கு பல வகைகள் காரணங்களாக கூறப்படுகின்றன. 'ஒத்தைக் கல் மந்து' என்ற பெயரே உதகமண்டலம் ஆயிற்று என தோதவர் சொல்கின்றனர். மூங்கில் காடு இருந்தாலும், நீர் அதிகம் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது என பலவாறு உரைக்கின்றனர்.

இயற்கை வளங்கள்

ஆறுகள்:

நீலகிரி மலைவளம் மிகுதியுள்ள மாவட்டம். அதனால் இங்கு மலைகளிலிருந்து ஓடிவரும் ஓடைகளால் பல ஆறுகள் உருவாகியுள்ளன. அவைகளில்: சீகூர் ஆறு, சாந்தி நல்லா ஆறு, முதுகாடு ஆறு, கல்ஹட்டி அருவி, செயின்ட் கேதரின் அருவி, கூனுர் ஆறு, காட்டேரி அருவி, குலகம்பை ஆறு, குந்தா நதி, பிலிதடாஹல்லா ஆறு, பைக்காரா நதி, மேயாறு முதலியன உள்ளன.

அணைகள்:

பைக்காரா, முக்குருத்தி, சாண்டிநல்லா, சிளன்மார்கன், மரவகண்டி, அப்பர் பவானி, எமரால்டு, குந்தா, அவலாஞ்சி, போர்த்திமந்து, பார்சன்ஸ் வேலி, முதலிய அணைகளிலிருந்து நீர் தேக்கப்பட்டு விவகாரத்திற்கும், நீர்மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பைக்காரா:

அணையின் நீளம் 705 அடி. 100 அடி ஆழமுள்ளது. 3080 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கீழேயுள்ள மின்சார உற்பத்தி நிலையத்திற்கு செங்குத்தாய் வீழ்கிறது. இவ்வணை மூன்று கட்டமாக முடிக்கப்பட்டு 1933 இலிருந்து இன்று பலவாறு வளர்ச்சியடைந்துள்ளது. இன்று 13,600 கிலோ வாட் ஆம்பியர் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சாந்தி நல்லா நீர்த்தேக்கம்:

       உதகை-மைசூர் பாதையில், உதகையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 540 லட்சம் யூனிட் அதிக மின்சக்தி இங்கு பெறப்படுகிறது.

காமராஜ் சாகர்: 
       உதகையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 540 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சுற்றுலா மையங்கள்:

உதகை மலைவாசத்தலங்களின் அரசி என்று அழைக்கப்படும் உதகமண்டலம் சுற்றுலா சொர்க்கமாகும். தாவரவியல் பூங்கா, உதகமண்டலம் ஏரி, தொட்டபெட்டா, முதுமலை வன விலங்கு புகலிடம், சிம்ஸ்பார்க், குன்னுர், கோடநாடு வியூ பாயிண்ட், கோத்தகிரி, கல்லட்டி நீர் வீழ்ச்சி உதகை, ஊட்டி, கோத்தகிரி, குன்னுர் மிகச்சிறந்த கோடை வாழிடங்களாகும். இதனால் இந்தியாவின் மற்ற மாநில மக்களும் வெளிநாட்டினரும் பெருமளவில் வருகின்றனர்.

உதகை மலர் கண்காட்சி:

உதகமண்டலத்தில் ஒவ்வோராண்டும் மே மாதத்தில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். மலர்க் கண்காட்சி பார்ப்பதற்காக பல வெளிநாட்டவரும் வருகை புரிகின்றனர். இக்கண்காட்சியில் காணவேண்டிய பூக்கள்: பிளாங்கெட் ஃபிளவர், ஸ்வீட் பீ பான்சி, வயோலா, மங்கி பிளவர், கப்பிளவர், பிளாக் பெரிலில்லி, போன்றவை; இத்தகைய 50 வகையான மலர்கள் கண்காட்சியில் இடம்பெறும்.



தொட்டபெட்டா:

கடல்மட்டத்திற்கு மேல் சுமார் 8640 அடி உயரத்தில் அமைந்துள்ளது. உதகை ரயிலடியிலிருந்து 10. கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் உச்சிவரை செல்ல நல்ல சாலைகள் உண்டு. இங்குள்ள கண்ணாடி அறையிலிருந்து இயற்கைக் காட்சிகள் ரசிக்கலாம். இங்கிருந்து உதகை, கூனுர், வெலிங்டன், குந்தா, கோயம்புத்தூர் முதலிய இடங்களைப் பார்த்துக் களிக்கலாம்.

உதகை ஏரி:

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையினர் ஏரியில் பல படகுகளை
விட்டிருக்கின்றனர். அதில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உல்லாச பொழுது போக்கலாம். மாலையில் குதிரைச் சவாரிக்கும் வசதி உண்டு. உதகை ரயிலடிக்கு அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது.



தோடர் கிராமம்:

முத்திநாடு மந்து பகுதியில் உள்ளது. இங்கு தோடர் பண்பாட்டைக் காணலாம். கிராமத்தின் உயர்ந்த இடத்திலிருந்து சிகடர் பள்ளத்தாக்கின் செங்குத்தான தோற்றத்தை நன்கு பார்க்கலாம்.

மார்லி மண்டு ஏரி:

இது உதகை ரயிலடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அழகான ஏரியாகும். இங்கு காலை, மாலையில் காலார நடந்து போகலாம்.

குதிரை பந்தயம்:

இந்தியாவில் உள்ள மலைவாழிடங்களில் இங்கு மட்டுமே குதிரைப்பந்தயம் கோடை காலத்தில் நடைபெறுகிறது.

வென்லாக் சமவெளி:

உதகை-மைசூர் வழித்தடத்தில் உதகையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. சுமார். 40 ச.மைல் பரப்புள்ளது. இதைப் போன்றதொரு இயற்கை அழகு நிறைந்த இடத்தை இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாது என்று வெளிநாட்டாரே வியக்கின்றனர். செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் மாலை நேரங்களில் சூரிய அஸ்தமனம் காண்பதற்கு அரிய காட்சிகளில் ஒன்று. இங்கு பார்க்க வேண்டியவை: இந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனம், காமராஜர் சாகர், தமிழக அரசு ஆட்டுப் பண்ணை, உதகை நாய்கள் பராமரிப்பு நிலையம், ஜிம்கானா கிளப்பின் கோல்ப் விளையாட்டு திடல்.

ஏல்க் மலை:

உதகை மார்க்கெட் பகுதியிலுர்நது சுமார் ஒரு மணி நேரம் நடந்தால் ஏல்க் மலைச் சிகரத்தை அடையலாம். இதன் உயரம் 8000 அடி; இங்கிருந்து முழு உதகையைக் கண்டு களிக்கலாம். லவ்டேல் தேயிலைத் தோட்டங்களை காணலாம். இங்கு முருகன் கோவில் ஒன்று இருக்கிறது.

வேலி வியூ:

உதகை-கூனுர் சாலை தடத்தில் 5 கி.மீ. உள்ளது. இங்கிருந்து கெட்டிப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கிராமங்கள், இயற்கை எழில் சூழ்ந்த இப்பிரதேசத்தில், சிறு சிறு பொட்டுக்களைப் போன்று தோன்றுவதைப் பார்ப்பதே அழகு!

வில்கன் மீன் பண்ணை:

உதகை ரயிலடிக்கு அருகில் உள்ளது. இங்கு மிர்ரர் சார்ப், கோல்டன் சார்ப், சீதர் சார்ப் போன்ற சிறந்த மீன்கள் வளர்க்கப்பட்டு விற்கப் படுகின்றன.

கேரின் மலை:

உதகை நகரிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது. உதகை ஏரியின் தெற்கே 7,500 அடி உயரத்தில் இருக்கிறது. உயர்ந்த மரங்கள் நிறைந்த இப்பகுதி அழகு மிக்கது.

புலிமலை:

கூனுருக்கு போகும் வழித்தடத்தில் ஆறாவது கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு கிலோ முன்னால் பிரியும் சாலை வழியாகச் சென்றால், புலிமலை நீர்த்தேக்கத்தை அடைய லாம். மலையில் இயற்கையாக அமைந்த பல குகைகள் காணப்படுகின்றன.

ஸ்டோடவுன் சிகரம்:

இச்சிகரம் சுமார் 8300 அடி உயரத்தில் உள்ளது. உதகையில் இதுவே இரண்டாவது உயர்ந்து சிகரம். செங்குத்தான இச்சிகரத்தை ஏறிக் கடக்க முடியாது. ஸ்பென்சர்ளி மலையிலுள்ள புனித ஸ்டீபன்ஸ் தேவாலயத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் வலது பக்கம் செல்லும் காடு வழியாக மலையுச்சியை அடையலாம். மலை ஏறுபவர் களுக்கு ஏற்ற இடம்.

கல்ஹட்டி அருவி:
உதகையிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள இவ்விடத்தில் 120 அடி உயர்ந்த பகுதியிலிருந்து நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. சல்ஹட்டி கிராமம் வரை பேருந்து செல்லும். அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவை நடந்து கடக்க வேண்டும்.

முகுர்த்தி ஏரி-சிகரம்:

மைசூர்-உதகை வழியாக, உதகையலிருந்து 243வது கி.மீ. தொலைவில் இடதுபுறமாகத் திரும்பி 10 கி.மீ. தொலைவு சென்று அங்கிருந்து வலதுபுறமாகத் திரும்பி ஒரு கி.மீ. சென்றால் முகுர்த்தி ஏரியை அடையலாம். சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இந்த ஏரி 6.5 கி.மீ. நீளமானது. பல பறவை இனங்களை இங்குக் காணலாம். இந்த ஏரியின் மேற்கில் உள்ளது 8380 அடி உயரமான முகுர்த்தி சிகரம்.

உதகை அரண்மனைகள்:

இந்தியாவில் இருந்த சுதேச சமஸ்தானங்களின் அரசர்கள், ஜமீன்தார்கள் கோடைக் காலத்தைக் கழிக்க இங்கு அரண்மனைகள் சிறிய அளவில் கட்டியுள்ளனர். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: ஆரன்மூர் அரண்மனை, பரோடா, மைசூர், நவநகர், நைஜாம் அரண்மனை. இவற்றில் ஆரன்மூர் அரண்மனையை மட்டும் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று பார்க்க முடியும். இது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை அலுவலகத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளளது.

முதுமலைப் புகலிடம்:

தமிழகத்திலுள்ள விலங்குகள் புகலிடங்களில் முதுமலையே சிறப்புப் பெற்று விளங்குகிறது. உதகமண்டலம், மைசூர் வழித்தடத்தில் இருக்கிறது. 1940-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இது பின்னர் 114 சதுர மைல் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இப்புகலிடம் நீலகிரி பகுதியிலுள்ள மோயாறு பக்கத்தில் இருக்கிறது. ஆற்றின் மறு கரையில் கர்நாடக மாநிலத்தின் பாந்தியூர் புகலிடம் உள்ளது. இரண்டு புகலிடங்களும் அருகருகே இருப்பதால், விலங்குகளும் இரண்டிடத்திற்கும் போய்வர ஏற்ற சூழல் அமைந்துள்ளது.

இயற்கைச் சூழல்:

முதுமலை உயர்ந்த மலைகளும், ஆறுகளும் மழை இருப்பதால் உயர்ந்த மரங்களும் சூழ அமைந்துள்ளது. 3000-3800 அடி குத்துயரம் உள்ள இடத்தில் அமைந்துள்ளதால், இங்கு சராசரி 55 அங்குலம் மழை பெய்கிறது. வெப்ப அளவு 55 முதல் 90 டிகிரி பாரன்ஹஂட் அளவினது. கோடைக்காலத்தில் அருகிலுள்ள வறண்ட காடுகளிலிருந்து இப்பகுதிக்கு விலங்குகள் வந்துவிடும். இங்கு பயிர் வகைகளும், விலங்குகளுக்கு தேவையான அளவு உணவும் கிடைத்து விடுகிறது. இங்குள்ள மரங்கள் பாதி இலையுதிர்க்கும் வகையை சார்ந்ததால் இலையுணவு விலங்குகளுக்கு பெருத்த தீனி கிடைக்கிறது. முதுமலை யானைகளுக்கும், புலிகளுக்கும் தாயகமாக விளங்கி வருகிறது. கார் என்று சொல்லப்படும் காட்டுக் காளையும், சம்பூர் மான்களும் இங்கு உள்ளன. இவை தவிர எலிமான், வேலிமான், சிறுத்தை, சாதாரண குரங்கு (மா முகமுக), எபினட் குரங்கு என்கிற செம்முக மந்தி, மலபார் அணில் போன்றவைகளும் உள்ளன. வனத் துறையினரால் யானைகள் போற்றிக் காக்கப்படுகின்றன; இங்கு யானைகள் பலவித வேலைகளையும் செய்து வருகின்றன. பறவை இனங்களில் ஹனி புகார்ட், மலபார் டிரோகான், கருந்தலை மஞ்சட் கொழும்பன், மரங்கொத்தி, மீன்கொத்தி போன்றவைகள் சாதாரணமாகப் பார்க்க முடியும்.

கூனுர்:

சிம்ஸ் பூங்கா:

1874-ஆம் ஆண்டு சென்னை மாநிலத் தலைமைச் செயலாளராக பணியாற்றிய ஜே.டி.சிம்மால் தோற்றுவிக்கப்பட்டதால் 'சிம்ஸ்' சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு மலர்க் கண்காட்சி மைதானத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பல வெளிநாட்டு மரங்களும், செடிகளும் இங்கு பயிரிடப்படுகின்றன.

பாஸ்ட்சர் இன்ஸ்டிடியூட்:

இவ்வாராய்ச்சி நிலையம் 1907 ஆம் ஆண்று தோற்றுவிக்கப்பட்டது. இங்கு வெறிநாய் கடிக்கு ஆராய்ச்சிகளும் மருத்துவமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு இளம்பிள்ளைவாதத் தடுப்பு நோய்க்கான போலியோ மருந்துகளும் தயாரிக்கப் படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் பார்வையாளர்கள் இவ்வாராய்ச்சி நிலையத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இதன் அருகிலேயே மத்திய அரசின் பட்டு உற்பத்தி ஆராய்ச்சி நிலையம் உள்ளளது.

பழ ஆராய்ச்சி நிலையம்:

கூனுரில் 1920-இல் அரசுத் துறையால் தொடக்கப்பட்டது. சுமார் 5600 அல்லது 5900 அடி கொண்ட மலைச்சரிவில் 16.10 ஏக்கர் நிலம்பரப்பில் ஆப்பிள், பிளம், பீச், பர்சிம்மன், லெமன், ஆப்ரிகாட் முதலிய பழவகைகள் பயிரிடப்படுகின்றன. 1949-இல் தொடங்கப்பட்ட நர்சரி ஒன்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

லாஸ் அருவி:

காட்டேரி-கூனுர் ஆறுகள் கூடும் இடத்தில் கூனுருக்கு அப்பால் 7 கி.மீ. தொலைவில் காணப்படுகிறது. சிறிய அருவி என்றாலும் பார்ப்பதற்கு இன்பமளிக்கும்.

விளக்குப் பாறை (லேம்ஸ் பாறை):

கூனுர் சாலை வழியாக இதை அடையலாம். இங்கிருந்து கோயமுத்தூர் மாவட்டத்தின் செழிப்பான சமவெளிப் பகுதிகளைக் காணமுடியும்.

லேடி கானிங் சீட்:

கூனுலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து, கூனுரின் மலைச்சரிவுகளில் பயிராகும் தேயிலைத் தோட்டங்களைச் சிறப்பாகக் காணலாம்.

துர்கம்:

கூனுரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்விடம் சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து கடக்க முடியாத பகுதிகளும் உள்ளன. இங்கு பாழடைந்த கோட்டை ஒன்று காணப்படுகிறது.

டால்பின் மூக்கு:

சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடம். கூனுரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து காதரைன் அருவியின் அழகை காணமுடியும்.

ராலியா அணை:

கூனுரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்துதான் கூனுர் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்கு நகராட்சிக்குச் சொந்தமான பயணியர் விடுதி உண்டு.

ஸ்டான்லி பூங்கா:

கூனுர் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இங்கு ஸ்கவுட் மாணவர்கள் ஆண்டுதோறும் வந்து தங்கி பயிற்சி மேற் கொள்வார்கள். தங்குவதற்கு வசதியாக மரத்தாலான குடிசைகளும், நல்ல குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன.

கோத்தகிரி

பழங்குடிகளான 'கோத்தர்களின் மலை' என்ற பொருளிலேயே இவ்வூர் அழைக்கப்படுகிறது. கோத்தகிரி கூனுரிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும்; மேட்டுப் பாளையத்திலிருந்து 34 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இரயில் வசதி உண்டு. சாலை வழியாக செல்வதென்றால் கூனுர், உதக மண்டலம், மேட்டுப் பாளையம் முதலிய ஊர்களிலிருந்து செல்லமுடியும். ஊட்டியிலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ளது. தங்குவதற்கு வசதியாக பயணிகள் பங்களா, உணவு விடுதிகள், தரமான தங்கு விடுதிகள் முதலியவை உள்ளன. இங்கு பார்க்கத்தக்க இடங்கள்:

ரங்கசாமி பாறை:

இது பழங்குடிகளின் புனிதத்தலம். செங்குத்தான பாறை வடிவங்களையே 'ரங்கசாமி' என்று அழைக்கின்றனர். இவ்விடம் கோத்தகிரியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சுமார் 5855 அடி உயரத்தில் காணப்படுகிறது. எளிதில் யாராலும் ஏறமுடியாத அமைப்பினை கொண்டு காட்சியளிக்கிறது.

புனித காதரின் அருவி:

உல்லாச பயணிகளுக்கு ஏற்ற பொழுதுபோக்கான இடம். கோத்தகிரியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

எல்க் அருவி:

இந்த அருவியும் 8 கி.மீ. தொலைவில் கோத்தகிரியின் அருகில் உள்ளது. இயற்கை அழகு மிகுந்து காணப்படும் இடங்களில் இதுவும் ஒன்று.

கோடநாடு வியூபாயிண்ட்:

இவ்விடம் கோத்தகிரியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து நோக்கினால், நீலகிரியின் கிழக்கு மலைச்சரிவுப் பகுதிகளையும், செழிப்பான விரிந்து பரந்து கிடக்கும் சமவெளிப் பகுதிகளையும் ரசிக்கலாம். பவானி ஆறு ஊர்களைச் சுற்று மெல்ல ஓடி வரும் தூரத்து அழகு வியக்க வைப்பதாகும்.

தங்கும் இடங்கள்:
அ) அபயாரண்யம் விருந்தினர் மாளிகை
ஆ) காருகுடி வனத்துறையினரின் தங்குமிடம்
இ) மசினிகுடி வனத்துறையினரின் தங்குமிடம் (காரு குடியிலிருந்து 8 கி.மீ.)

மேலே கண்ட இடங்கள் காட்டுக்குள் இருப்பதால் மாவட்ட வனத்துறை அதிகாரியின் அனுமதி பெற்றால்தான் இவ்விடங்களில் தங்க முடியும்.

விலங்குகள் நீரருந்த வரும் இடங்களில் உயரமான பரண் அமைக்கப் பட்டுள்ளது. அவற்றிலிருந்து கண்டுகளிக்கலாம். பிடிக்கப்பட்ட யானையின் மீதேறி பாகனுடன் உள்ளே சுற்றிப் பார்க்கலாம். இங்கு வேட்டையாடவோ, மீன்பிடிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது.
                 இது ஒரு தமில்களஞ்சியம்.காம் படைப்பாகும். 

நீலகிரி சுற்றுலாதல காட்சிகள்: 





Tuesday 25 October 2011

தமிழக அருவிகள்

 கும்பக்கரை அருவி:
 
       கும்பக்கரை அருவியானது கொடைக்கானல் மலையடிவாரம் பெரியகுளத்திலிருந்து ஏலாவது கிலோமீட்டரில் உள்ளது. குறைவான உயரத்திலிருந்து விழுந்தாலும் குளிப்பதற்கு மிக இதமாக இருக்கும் அருவி. கொடைக்கானல் சில்வர் பால்ஸ்(silver falls)  உடைய  துணை அருவி தான் இது. 

சுருளி அருவி:
  சுருளி அருவி கம்பத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், தேனியிலிருந்து 56  கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.  சுருளி அருவி சுமார் 150 அடி உயரத்திலிருந்து பாறையின் மேல் முத்தமிட்டு மீண்டும் 40 அடி உயரத்திலிருந்து கீழ் நோக்கி பாய்வதைப் பார்க்க கண் கொள்ளாக்காட்சியாகவும், இயற்கையின்  அழகாகவும் உள்ளது.அருவிக்கு செல்லும் பாதையின் ஓரத்தில் உள்ள இயற்கை காட்சிகள் எல்லாம் கண்களுக்கு விருந்தளிப்பது போல் இருக்கும்.இதை கேமராவில் கிளிக் செய்ய மறந்துவிடாதிர்கள். மேலும் அருவிக்கு செல்லும் வழியில் திராட்சை தோட்டங்கள் உள்ளன. இங்கு நீங்கள் சுத்தமான திராட்சைகளை வாங்கிக் கொள்ளலாம். தேக்கடி,வைகை அணைகளுக்கு வருகை தரும் சுற்றுலாவாசிகள் மறக்காமல் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியை கண்டு மகிழுங்கள்.

குரங்கு அருவி(monkey  falls):
           இந்த மன்கி பால்ஸ் ஆனது பொள்ளாச்சியிலிருந்து 18 கி.மீ தூரத்திலிருக்கும் மன்கி பால்ஸ் இல்  குளிக்க குளிக்க சுகம்தான். அருவியிலிருந்து மேலே சென்றால் வால்பாறை,டாப்ஹில்ஸ் கீழே சென்றால் ஆழியார் டேம் என ஒரு நாள் முழுவதும் சுற்றி வரலாம். குறிப்பு: பாரஸ்ட் செக் போஸ்ட் கடந்து சென்றவுடன் மன்கி பால்ஸ் உள்ளது. எல்லோரும் இதை பார்த்தவுடன் இங்கேயே சென்று வருகின்றனர்.ஆனால் மேலே சிறிது தூரம் சென்றால் இன்னொரு பெரிய மன்கி பால்ஸ் உள்ளது.

கொல்லிமலை அருவி:
         கொல்லிமலை அருவி 600  அடி உயரத்தில் ஆகாயத்திலிருந்து விழுவதுபோல் இருப்பதால் ஆகாய கங்கை என்று கொல்லிமலை அருவிக்கு பெயர். நாமக்கல்லிலிருந்து 55 கி.மீ தூரத்திலிருக்கிறது. 26  கி.மீ மலைப்பயணம் செய்ய வேண்டும். 70 கொண்டாய் ஊசி வளைவுப் பயணம் சிலிர்ப்படையச் செய்யும்.சுற்றுலாப் பயணிகள் நாமக்கலில் தங்கிக் கொள்ளலாம்







கோவை குற்றாலம்:
.       இந்த  கோவை குற்றாலம் ஆனது கோவையிலிருந்து 37 கீ.மி தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி நீராக சுவையாக ஊற்றெடுத்து வரும் அருவி தான் கோவை குற்றாலம் ஆகும்.அருவியை அடைய சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லாததால் 4 மணிக்குள் குளித்து முடித்துவிடவேண்டும். மேலும் இங்கு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் சிறிது எச்சரிக்கையாக குளிக்க வேண்டும்.ஏற்கனவே இங்கு யானையிடம்  சிக்கி ஒரு குழந்தை இறந்துள்ளது.எனவே குழந்தையுடன் வருபவர்கள் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும். கோவை குற்றாலத்திலிருந்து சிறிது தூரத்தில் வெள்ளியங்கிரி மழையும், வன பத்ரகாளியம்மன் கோவிலும், தென் திருப்பதி கோவிலும் உள்ளது. பொதுவாக வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் கோவை குற்றாலம், வன பத்ரகாளியம்மன் கோவில் , தென் திருப்பதி கோவில்,மருதமலை முருகன் கோவில்  ஆகிய இடங்களுக்கு சென்று வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.

திருமூர்த்தி வாடர்பால்ஸ்:
   திருமூர்த்தி அணையும் அதன் நீர்வீழ்ச்சியும் சுற்றுலாவாசிகளுக்கு இன்னொமொரு சுற்றுலதலமாக உள்ளது. அதன் அருகே முதலை வளர்ப்பு பண்ணையும் உள்ளது. மேலும் வருடம் முழுவதும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிறு ஓடையும் உள்ளது.இந்த திருமூர்த்தி வாடர்பால்ஸ்  ஒட்டி தெய்வீக தன்மை கொண்ட அமலிங்கேஸ்வரர் கோவில் அமைத்துள்ளது. இதனால்  கோயிலின் மேல் நீர்வீழ்ச்சி வந்து ஊற்றுவதைப் பார்க்க கண்கொல்லாகாட்சியாகவும்  அழகுக்கு அழகு சேர்த்தது போலவும் உள்ளது. இந்த திருமூர்த்தி வாடர்பால்ஸ் உடுமலைபேட்டையிலிருந்து 20 கீ.மி தொலைவில் பழனி-கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.சுற்றுலாப்பயணிகள் உடுமலைபேட்டையில் தாங்கிக்கொள்ள வசதிகள் உள்ளது.






சில்வர்பால்ஸ்(silver falls):
          மதுரை-கொடைக்கானல்  சாலையில் தென்படும் சில்வர் பால்ஸ் நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை முதன்மையாக கவரும் தன்மையுடையது. இந்த சில்வர் பால்ஸ் 180 அடி உயரத்திலிருந்து வேகமாக வரும் இத்தண்ணீர் அடுக்கடுக்கான பாறைகளில் பட்டு கொட்டுவதைப் பார்க்கும் எவரையும் கவர்ந்து இழுத்துவிடும்.கண்ணாடிப்போல் தெள்ள தெளிவாக தெரியும் இந்நீரில் பல வகையான கனிமங்கள் கலந்துள்ளது. கொடைக்கானல் ஏரியிலிருக்கும் அதிகப்படியான நீர் கீழ் நோக்கி பாய்ந்து வந்து அருவியாக கொட்டுகிறது.கொடைகானலிலிருந்து 8 கீ.மி தொலைவில் உள்ளது.இந்த சில்வர் பால்ஸ் அருவியில் குளித்தால் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இப்பள்ளமான இடத்தில வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது.இங்கு உள்ள கடைகளில் பழங்களும், காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களும் விற்கப்படுகிறது. இயற்கை அழகை ரசிப்பவர் எவராயினும் இங்கே மணிகணக்கில் உட்கார்ந்து பார்த்து பரவசம் அடைவர்.